பொது நிகழ்ச்சிகளை தவிர்க்கும் மதாபி..
பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியின் தலைவராக இருப்பவர் மதாபி புரி புச். இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தவறான வகையில் பணிகளை செய்வதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அதானி நிறுவன பங்குகள், ஹிண்டன்பர்க் அறிக்கை உள்ளிட்டவை எழுப்பிய புகார்களுக்கு மறுப்பு தெரிவித்து வந்தாலும், தொடர்ந்து ஒரே மாதிரியான குற்றச்சாட்டு வருவதால், பொது நிகழ்ச்சிகளை மதாபி தவிர்த்து வருகிறார். மும்பையில் NABFID அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் மதாபி பங்கேற்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவரால் வரமுடியாமல் போனதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். நிலைமை இப்படி இருக்கையில் அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், மதாபி மீது விடாமல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அதில், செபியின் தலைவரின் முழுமையான மவுனம் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது. செபி அமைப்பின் தலைவராக கடந்த 2022ஆம் ஆண்டு முதல் மதாபி செயல்பட்டு வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து மதாபி, செபியில் முழுநேர பணியாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்றும், நாட்டின் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பில் உள்ள குழப்பங்கள், முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக மதாபிக்கு ஐசிஐசிஐ வங்கியில் இருந்து எப்படி 16 கோடி ரூபாய் சம்பளம் கிடைத்தது என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.