Cred’ நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் ஒருவர் உலகளாவிய தொழில்நுட்பத் தலைமைப் பொறுப்பை ஏற்பது என்ற முன்னோடியில்லாத வகையில், ‘Cred’ நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப்பின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) வில் கேத்கார்ட்டுக்குப் பதிலாகப் பொறுப்பேற்க உள்ளார்.
வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, அதன் மெசேஜிங் தளத்தில் பணம் செலுத்துதல் மற்றும் வர்த்தகச் சேவைகளை மேலும் ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய ஃபின்டெக் நிறுவனமான கிரெட்டில் ரூ. 8,550 கோடி முதலீடு செய்கிறது.
இந்த நியமனத்தின் மூலம், இந்தியாவில் சுமார் 50 கோடி பயனர்களையும் உலகம் முழுவதும் சுமார் 300 கோடி சந்தாதாரர்களையும் கொண்ட, உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மெசேஜிங் தளத்தின் தலைமைப் பொறுப்பை குணால் ஷா ஏற்கிறார்.
இந்த முதலீட்டுச் சுற்றில், ஏற்கனவே உள்ள பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை இரண்டாம் நிலை விற்பனை மூலம் வாங்குவதற்கு சுமார் 40 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள 50 கோடி டாலர் நேரடியாக நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக முதலீடு செய்யப்படும்.
ஒப்பந்த விதிமுறைகள் குறித்து அறிந்த ஒருவரின் தகவலின்படி, மெட்டாவின் தளங்களில் பயன்படுத்தக்கூடிய கூடுதல் 10 கோடி டாலர் மதிப்பிலான விளம்பரக் கிரெடிட்களையும் கிரெட் பெறும்.
இந்நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த முதலீட்டிற்குப் பிறகு கிரெட்டின் மதிப்பு சுமார் ரூ. 43,239 கோடியாக இருக்கும்.
புதிய மூலதனத்துடன் சேர்த்து, இந்த முதலீட்டுச் சுற்று கிரெட்டுக்கு அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான ஒரு முக்கிய ஆதரவாளரை வழங்குகிறது; அதே வேளையில், இந்தியாவின் மிக முக்கியமான நுகர்வோர் ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றின் பங்குதாரர் பட்டியலில் இணைய மெட்டாவுக்கும் இது வழிவகுக்கிறது.
“இந்த இரண்டாம் நிலை விற்பனை கிரெட்டின் குழு மற்றும் பங்குதாரர்களால் மேற்கொள்ளப்படுகிறது” என்று விவகாரம் தெரிந்த ஒருவர் கூறினார். “ஆரம்ப கால மற்றும் பெரிய முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை விற்பனை செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும். முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளில் சுமார் 15-20 சதவீதத்தை விற்பனை செய்து பணமாக்குகிறார்கள்” என்றார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஷா திங்களன்று கிரெடிலிருந்து விலகி மெட்டாவின் உலகளாவிய தலைமைத்துவக் குழுவில் இணைந்தார். பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவான தனிப்பட்ட பங்குகளைத் தக்கவைத்துக்கொண்டாலும், அவர் தனது இயக்குநர் குழு உறுப்பினர் பதவியையும் துறக்கிறார்.
