300 விப்ரோ ஊழியர்கள் பணிநீக்கம்…
ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, ஓய்வு நேரத்தில் மற்றொரு நிறுவனத்துக்கு பணி செய்து தரும் செயலுக்கு மூன்லைட்டிங் என்று பெயர்.
இந்த வகை மூன்லைட்டிங்கிற்கு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ தனது நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே மூன்லைட்டிங் செய்த 300 பணியாளர்களை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணியின்போது நேர்மையில்லாமல் இவ்வாறு துரோகம் செய்ததால் 300 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனத்தின் செயல் தலைவரான ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். போட்டி நிறுவனங்களுக்கு தங்கள் நிறுவன பணியாளர்கள் வேலை செய்வதை தங்கள் நிறுவனம் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலைமை இப்படி இருக்க பகுதி நேர வேலை அளித்து வரும் ஸ்விக்கி நிறுவனம் மூன்லைட்டிங் செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது. அதாவது வேலை நடந்தால் போதும் என்பதே தங்கள் கருத்து என கூறியுள்ளது. இந்த நிலையில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெக் மகேந்திராவின் நிர்வாகிகளில் ஒருவரான குர்னானி என்பவர், தங்கள் நிறுவன பணியாளர்கள் மூன்லைட்டிங் செய்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.