49%உயர்ந்த மின்சார வாகன விற்பனை..
உலகளவில் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி வரும் சூழலில், அதனை குறைக்க களமிறங்கியுள்ள, மின்சார வாகன விற்பனை இந்தியாவில் கடந்தாண்டு 49விழுக்காடு உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் என்ற அமைப்பு FADA என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்தியாவில் எத்தனை வாகனங்கள் விற்கப்பட்டன என்ற புள்ளிவிவரம் இந்த அமைப்பால் வழங்கப்படுகிறது. இவர்கள் வெளியிடும் புள்ளிவிவரங்கள் நம்பிக்கை மிகுந்ததாக மக்கள் மத்தியில் உள்ளது. மின்சார கார்கள், மின்சார இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என பலதரப்பு மின்சார வாகனங்களும் விற்பனை செய்யும் டீலர்கள் தங்கள் விற்பனை தரவுகளை FADAவிடம் அளித்துவிடுவார்கள். அவர்களின் தரவுகளின்படி ஆண்டுக்கு ஆண்டு மின்சார வாகனங்களின் விற்பனை அளவு 49.25 விழுக்காடு உயர்ந்திருப்பதாக FADA என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது கடந்த ஓராண்டில் மட்டும் 15,29,947 மின்சார வாகனங்கள் மொத்தமாக விற்கப்பட்டுள்ளதாக FADA தெரிவிக்கிறது. கடந்த 2022-ல் இந்தியாவில் மின்சார வாகனங்கள் வெறும் 10லட்சத்து 25 ஆயிரத்து 63 மட்டுமே விற்கப்பட்டன. இதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை 36.09%அதிகரித்துள்ளது. அதாவது 2022-ல் விற்பனையான மின்சார இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 6,31,464, ஆனால் கடந்தாண்டு மட்டும் 8,59,376மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்கிறது FADA. மின்சார 3 சக்கர வாகனங்கள் 65.22விழுக்காடு விற்பனை உயர்ந்திருக்கிறதாம். அதாவது 2022-ல் விற்கப்பட்ட மின்சார 3 சக்கரவாகனங்களின் எண்ணிக்கை 3.52 லட்சம் ஆனால் 2023-ல் 5 லட்சத்து 82 ஆயிரம் மின்சார ஆட்டோக்கள் விற்கப்பட்டுள்ளனவாம்.