இந்திய பொருளாதாரத்தில் அதானியும்,அம்பானியும்….
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதானி மற்றும் அம்பானியின் பங்களிப்பு 4 விழுக்காடாக உள்ளது. ஒரு காலத்தில் குஜராத்தில் பயனற்று கிடந்த சதுப்பு நிலப்பகுதி இன்று முந்த்ரா துறைமுகமாக உருவாகியுள்ளது. இந்த துறைமுகம் இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் துறைமுகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதேபோல் கட்ச் அருகே உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.இந்த இரு இடங்களும் முறையே அதானி மற்றும் அம்பானியின் முயற்சிகளால் உலகப்புகழ்பெற்றுள்ளன. இந்த இரண்டு தொழிலதிபர்களும் இணையும் ஒரு புள்ளி என்றால் தேசிய உணர்வு மட்டுமே.. இரு தொழிலதிபர்களும் தேசிய உணர்வோடு பல்வேறு இடங்களில் முதலீட்டை செய்து வருகின்றனர். சிறு துளியாக ஆரம்பித்த திருபாய் அம்பானியின் எண்ணெய் நிறுவனமும், அதானியின் சிறு மும்பை அலுவலகமும் இன்று உலகளவில் 452 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற பிரமாண்ட சொத்து மதிப்புகளை கொண்டுள்ளன. ஹூருன் இந்தியா என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 4 மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சியை எட்டமுடியாமல் தவித்து வரும் சூழலில் அம்பானி மற்றும் அதானியின் நிறுவனங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன.முதலில் பெட்ரோ கெமிக்கல் வியாபாரத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் பின்னர் ஜவுளித்துறையில் களமிறங்கியது. பாலிமர்களை வைத்து ஆடைகளை உருவாக்கி வந்த அந்த நிறுவனம் தற்போது பெரிய அளவில் ஜவுளித்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.2016ம் ஆண்டு வரை இவையே பெரிய வியாபாரமாக இருந்து வந்தது. 2016ம் ஆண்டு ஜியோ தனது தொலை தொடர்பு சேவையை அளிக்கத்தொடங்கியதும் அமோக வளர்ச்சி ஏற்பட்டது. குறுகிய காலத்தில் 42 கோடி சந்தாதாரர்களை அந்நிறுவனம் பெற்றுள்ளது.ஜியோவை ஆதாரமாக வைத்து தற்போது காய்கனி,மின்சாதனம் மற்றும் துணிகடைகளின் வணிகமும் விரிவடைந்துள்ளது.1980களில் வைரம் விற்று வந்த கவுதம் அதானி, உலோகம் மற்றும் உணவு தானிய விற்பனையிலும் ஆதிக்கம் செலுத்தினார். 1998ம் ஆண்டு முந்த்ரா துறைமுகம் கட்டும் பணி மூலம் பிரபலமான அதானி, நாட்டின் 24 விழுக்காடு துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். விமான நிலையம், துறைமுகங்களிலும் அதானியின் வருமானம் கொட்டுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரியில் 22 விழுக்காடு மின் உற்பத்தியாக மாற்றி அதன் மூலமாகவும் வருவாய் ஈட்டி வருகிறார்.தேசிய உணர்வு மட்டுமல்ல சில வணிகங்களில் இருவரும் நேரடியாக சந்தித்துக்கொள்ளும் சூழலும் அமைந்துள்ளன. அதற்கு ஆதாரமாக அண்மையில் என்டிடிவி நிறுவனத்தின் பெரும்பங்கை அதானி வாங்கிவிட்டார். இதனால் ஏற்கனவே ஊடகத்துறையில் உள்ள முகேஷ் அம்பானியும், அதானியும் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் தொலைதொடர்பு சேவையில் ஆதிக்கம் செலுத்திய அம்பானியின் வணிகத்தில் 5ஜி ஏலத்தின்போது அதானியின் நிறுவனமும் சிறிய அளவு அலைக்கற்றையை தனது துறைமுகத்துக்கு வாங்கினார். இதனால் அங்கேயும் இரு பிரமாண்ட நிறுவனங்களும் சந்தித்துக்கொள்ள வேண்டியதாக சூழல் அமைந்தது. தற்போது ஹைட்ரஜன்,சோலார் மற்றும் பேட்டரி உற்பத்தியில் இந்த இரு பெரிய நிறுவனங்களும் களம்காண்கின்றன.தனது தலைமையை வாரிசுகளுக்கு அம்பானி விட்டுக்கொடுத்து வந்தாலும்,அதானியும் அம்பானியும் செய்து வரும் வணிகம் இன்னும் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை….