இது டாடா சேர்மேன் எழுதும் மடல்..
டாடா குழுமத்தின் தலைவராக தமிழரான சந்திரசேகரன் இருக்கிறார். இவர் அண்மையில் ஆண்டு இறுதியை ஒட்டி ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அடுத்த 5 ஆண்டுகளில் 5லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் முதல் அரைகடத்தி தொழிற்சாலை தொலேலராவில் தயாராகி வருவதாக கூறியுள்ளார். கர்நாடகம், தமிழ்நாட்டில் பல்வேறு ஆலைகளும், பேட்டரி செல் உற்பத்தி குஜராத்திலும் தயாராகி வருவதாக கூறியுள்ளார். உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்புகள் அளிப்பதுடன் இல்லாமல், சில்லறை வணிகம், டெக் துறை, விமானம் மற்றும் விருந்தோம்பல் துறைகளிலும் வேலைவாய்ப்புகளை அளிக்க திட்டமிட்டுள்ளார். அரசாங்கத்தின் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாடுகளை டிசிஎஸ் மற்றும் தேஜஸ் நெட்வொர்க்ஸ் இணைந்து செயல்படுத்த இருப்பதாகவும், ஏர் இந்தியா நிறுவனம் 4 விமான நிறுவனங்களை இணைப்பதாகவும், தாஜ் நிறுவனம் இந்தியா மட்டுமின்றி உலகின் வலுவான பிராண்டாக உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் காலம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உற்பத்தி துறையில் இந்தியாவின் பொற்காலம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய பொருளாதாரத்தினை உருமாற்றும் துறை உற்பத்தித்துறை என்று கூறிய அவர், ஒவ்வொரு மாதமும் தலா 10லட்சம் பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். ரத்தன் டாடாவை சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய சந்திரசேகரன்,நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்த நாம் அடுத்த ஆண்டு சிறப்பாக இயங்குவோம் என்று நம்பிக்கையுடன் கடிதத்தை முடித்தார். இளம் தலைமுறையினர் இந்தியாவை உருவாக்குவார்கள் என்றும், அவர்களின் எண்ணங்கள் மற்றும் கைகளில்தான் எதிர்காலம் உள்ளது என்றும் கூறி முடித்துள்ளார்.,