தொடர்ந்து பட்டய கிளப்பும் இந்தியா…
2023-ல் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்ந்தது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் 2024ஆம் ஆண்டும் இது தொடரும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. கடன்களின் மீதான நிலையானவட்டி விகிதம், பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளால் இந்தியா தொடர்ந்து வேகமாக உயர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது. மேலும் இந்தியாவிடம் பேதுமான வெளிநாட்டு பண கையிருப்பும் உள்ளது. உலகில் பல்வேறு பிரச்னைகள் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் சூழலில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மார்ச்சுடன் முடியும் காலாண்டில் 6.1%ஆக இருந்து வருகிறது. ஜூன் வரையிலான காலாண்டில் 7.8, செப்டம்பருடனான காலாண்டில் 7.6%ஆக உள்நாட்டு உற்பத்தி உயர்ந்திருக்கிறது. நிதியாண்டின் முதல் அரையாண்டு அதாவது 6 மாதங்களில் மட்டும் இந்தியாவின் வளர்ச்சி 7.7%ஆக இருக்கிறது. இது சீனாவைவிட மிகவும் அதிகமாகும்.சீனாவின் வளர்ச்சி 5.2%ஆக இருக்கிறது. பிரேசிலின் அளவோ வெறும் 3%ஆக இருக்கிறது. 2024ஆம் ஆண்டை பொறுத்தவரை OCED தரவுகளின்படி இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது 6.1%ஆக இருக்கும் என்றும் , சீனா 4.7%ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரியும் என்றே கூறப்படுகிறது. ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, உலக பொருளாதார நிலை 3.5%இல் இருந்து 3%ஆக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி ரிசர்வ் வங்கி அதிகாரி அஷிமா கோயல் கருத்து தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பல்வேறு அதிர்வலைகளை தாங்க முடியாமல் தவிக்கும் நிலையில் அதை இந்தியா சிறப்பாக தாங்கி வருவதாக கூறியுள்ளார். 2024-25 காலகட்டத்தில் சர்வதேச அளவில் நிகழும் நிகழ்வுகள்தான் இந்தியாவின் வளர்ச்சியில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச அளவில் நிலவும் கருங்கடல் வழித்தட பிரச்னை, இஸ்ரேல் காசா போர், ரஷ்யா- உக்ரைன் போர் ஆகியவும் உணவுப்பொருள் விலைவாசி உயர்வில் முக்கிய பங்கு வகிப்பதாக அண்மையில் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். இதனையே பொருளாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் வெளிநாட்டு பண கையிருப்பு என்பது அண்மையில் 600பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்டியது. நடப்பு கணக்கு பற்றாக்குறை நிலை குறிப்பிடத்தகுந்த நல்ல முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. பற்றாக்குறை கடந்த செப்டம்பரில் ஒரு விழுக்காடு வரை குறைந்துள்ளது. இதற்கு முன்பு இந்த கணக்கு பற்றாக்குறை அளவு என்பது 3.8%ஆக இருந்தது.