ஸ்விக்கி செய்த முக்கியமான நடவடிக்கை..
உணவு டெலிவரி செய்யும் தொழிலில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஸ்விக்கி திகழ்கிறது. தொழிலை மேம்படுத்த தேவைப்படும்நிதியை ஆரம்ப பங்கு வெளியீடு மூலம் பெறும் முயற்சியில் இந்த நிறுவனம் உள்ளது. இந்நிலையில் அதன் தாய் நிறுவனமான bundl technologies pvt ltd நிறுவனத்தின் பெயரை ஸ்விக்கி பிரைவேட் லிமிட்டட் என்று அந்நிறுவனம் பெயர் மாற்றி பதிவு செய்திருக்கிறது. அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் ஆலோசித்து இந்த முடிவை ஸ்விக்கி நிறுவனம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்றி பதிவு செய்திருப்பது இந்நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பை உயர்த்தும் என்றும், ஸ்விக்கி என்ற பெயர் மக்கள் மத்தியில் எளிதாக சென்று சேரும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் பெயர் மாற்றத்துக்காக கடந்தமாதம் விண்ணப்பித்து இருந்தது. 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டும் வகையில் ஆரம்ப பங்கு வெளியீடுக்கு ஸ்விக்கி தயாராகி வருகிறது. அதில் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்தே பங்குகளாக வாங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கான வரைவு ஆவணங்களை ஸ்விக்கி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனத்தை லாபகரமாக மாற்ற பல்வேறு உத்திகளையும் ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் கைவசம் இருக்கிறதாம். 400 இடங்களில் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டமும் ஸ்விக்கியில் உள்ளதாம். ஸ்விக்கியின் வருவாய் மார்ச் 2023 வரை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு அளவில் 45%உயர்ந்து 8265 கோடி ரூபாயாக இருக்கிறது. நஷ்டம் என்பது 15 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு நந்தன் ரெட்டி ,ஸ்ரீஹர்ஷா மஜேட்டி ஆகியோர் இணைந்து தொடங்கிய நிறுவனமே ஸ்விக்கி என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஸ்விக்கியின் போட்டி நிறுவனமான சொமேட்டோ நிறுவனத்தின் வருவாய் 7,079 கோடி ரூபாயாக இருக்கிறது. இதன் உயர்வு 69 விழுக்காடாக இருக்கிறது. குருகிராமை அடிப்படையாக கொண்டு இயங்கும் சொமேட்டோ நிறுவனம் வெறும் 971 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது. இது கடந்த 2022 நிதியாண்டில் இருந்த 1222 கோடி ரூபாயைவிடவும் கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.