9கேரட் தங்கத்துக்கும் ஹால்மார்க்?
இந்தியாவில் விரைவில் 9 கேரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் செயின் பறிப்புச் சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 14,18,20,22,23,24 ஆகிய கேரட்களில் உள்ள தங்க நகைகளுக்கு BIS சான்று கடந்த 2022ஆம் ஆண்டு அவசியமாக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் தங்க தேவை 750 டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலகத்திலேயே தங்கத்தை அதிகம் வாங்கும் இரண்டாவது நாடாகவும் இந்தியா இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறுகிறது. இந்தாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் தங்க தேவை கடந்தாண்டைவிட ஒன்றரை சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் அடுத்தடுத்த பண்டிகை நாட்களும் வர இருப்பதால் தங்கத்தின் மீதான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 22கேரட் தங்கத்தின் 10 கிராம் மதிப்பு ஆகஸ்ட் மாதத்தில் 68 ஆயிரம் ரூபாயாக இருக்கும் நிலையில் 9 கேரட் தங்கம் 10 கிராம் 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே இருக்கும். தேசிய குற்ற ஆவண காப்பக தகவலின்படி 2022ஆம் ஆண்டில் மட்டும் 9278 செயின்பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இது 2021-ல் 7ஆயிரமாக இருந்து, 32.54% உயர்ந்துள்ளது. 2023 நிதியாண்டில் இந்தியா 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு மட்டுமே தங்கத்தை இறக்குமதி செய்தது. ஆனால் கடந்த நிதியாண்டில் இது 45.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஸ்விட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், பெரு மற்றும் கானா ஆகிய நாடுகளில் இருந்துதான் இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்கிறது.