பைஜூஸ்க்கு அடுத்தடுத்த சோதனை..
பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜுஸ் உயர்ந்த வேகத்தில் வீழ்ந்த கதை உலகிற்கே தெரிந்த ஒன்றாகும். இந்நிலையில் அந்நிறுவனத்தின் மதிப்பை குறைத்து அண்மையில் மூடீஸ் என்ற நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த சூழலில் பிளாக் ராக் என்ற நிறுவனம் தற்போது பைஜூஸ் பற்றி புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு வெறும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்தான் என்கிறது பிளாக் ராக். இது சந்தை மதிப்பை விட 95 விழுக்காடு குறைவாகும்.
உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக் ராக் பைஜூஸ் நிறுவனம் பற்றி வெளியிட்டிருந்த தரவு சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் பைஜூஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மற்றும் நிறுவனத்தின் சொத்துமதிப்பு 22 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிட்டு இருந்தது. இது தற்போது வெறும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவே சரிந்துள்ளது. புதிய நிதியை நிறுவனத்துக்குள் இறக்க முடியாமல் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் தடுமாறி வருகிறார். இதனால் கடந்தாண்டில் நவம்பரில் ஊழியர்களுக்கே சம்பளம் தரமுடியாத சூழல் உருவானது.
ஒரு பக்கம் நிதிச்சுமை மற்றொரு அமலாக்கத்துறை விசாரணை என அனைத்து தரப்பிலும் இருந்து பைஜூஸ் நிறுவனத்துக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் இந்தியாவிலேயே அதிகபட்ச மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமாக கருதப்பட்ட பைஜுஸ் நிறுவனம் வளர்ந்த வேகத்தில் வீழ்ந்துவிட்டது. அந்நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பதவியேற்ற அர்ஜூன் மோகன் 4,500 ஊழியர்களை கடந்தாண்டு செப்டம்பரில் வீட்டுக்கு அனுப்பினார். இதனால் நிதிச்சுமை குறையும் என்றும் அந்நிறுவனம் தரப்பில் விளக்கப்பட்டது.