மாதபி மீது வழக்குப்பதிவு செய்ய ஆணை..

இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்குமுறை அமைப்பான செபியின் தலைவராக இருந்தவர் மாதபி புரிபுச். இவர் மற்றும் மேலும் 5 பேர் மீது பங்குச்சந்தை முறைகேடு மற்றும் விதிமீறல் புகார்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் மும்பையில் உள்ள ஊழல் தடுப்புப்பிரிவான acb வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் அதே நேரம் 30 நாட்களுக்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பத்திரிகை நிருபர் ஒருவர் தொடர்ந்த இந்த வழக்கில், பெரியளவில் நிதி முறைகேடுகளும், விதிமீறல்களும், ஊழல்களும் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு செபியின் சட்டத்தை மீறி தனியார் நிறுவனம் ஒன்று பங்குச்சந்தைகளில் தங்கள் பங்கை வெளியிட்டுள்ளதாகவும், விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. செபி மற்றும் சட்ட அமலாக்கத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது. செபி தனது கடமையை சரியாக செய்யவில்லை என்றும், தவறான கணக்கீடு நடந்துள்ளதாகவும், கார்பரேட் ஃபராட் நடந்துள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல முறை புகார் அளித்தும் செபியின் முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், காவல்துறையினரும் இதனை அலட்சியப்படுத்தியதாகவும் நிருபர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் ஊழல் பிரிவுகளிலும், செபியின் விதிகளின்படியும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. அதானி நிறுவனத்துடன் மாதபிக்கு தொடர்பு இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நிலையில் மாதபி பதவி விலக அழுத்தம் வலுத்தது. ஆனால் குற்றச்சாட்டுகளை மாதபி முழுமையாக மறுத்தார். இந்த நிலையில் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் தனது நிறுவனத்தை முழுமையாக மூடியுள்ளது.