ஸ்விகி ஐபிஓ விலை இதுதான்..
பிரபல உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் டெலிவரி நிறுவனமான ஸ்விகி தனது ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கான இறுதிகட்ட பணிகளை செய்து வருகிறது. ஒரு பங்கின் விலை 371 ரூபாயில் இருந்து 390 ரூபாயாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 11.3பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட ஸ்விகி,செபியிடம் மனுக்களை தாக்கல் செய்தது.
11,300 கோடி ரூபாய் அளவுக்கு நிதியை திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 6 ஆம் தேதி முதல் இந்த ஐபிஓ தொடங்க இருக்கிறது. இது மட்டுமின்றி 6 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவன பங்குகளை ஓஎப்எஸ் முறையிலும் விற்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 4,500 கோடி ரூபாய் அளவுக்கு பங்குச்சந்தையில் இருந்து பணம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சக போட்டியாளரான சொமேட்டோவின் சந்தை மூலதன மதிப்பு 26.5பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. பிரோசஸ் என்ற நிறுவனம் ஸ்விகியில் 31 விழுக்காடு பங்குகளை வைத்துள்ளது. இதேபோல் அமெரிக் சொத்து நிர்வாக நிறுவனமான இன்வெஸ்கோவும் 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது. Accel, Elevation Capital,Norwest Venture ஆகிய நிறுவனங்களும் ஸ்விகியில் உள்ள தங்கள் பங்குகளை விற்று பணமாக மாற்ற திட்டமிட்டுள்ளன. ஸ்விகியை ஆரம்பித்த ஸ்ரீஹர்ஷா மஜேட்டி, ராஹுல் ஜெய்மினி மற்றும் நந்தன் ரெட்டி ஆகியோரும் தங்களிடம் இருக்கும் பங்குகளில் குறிப்பிடத்தகுந்த அளவை விற்க முடிவு செய்துள்ளனர். ஸ்விகியைப்போலவே சொமேட்டோவும் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. 8,500 கோடி ரூபாய் நிதியை சொமேட்டோ திரட்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.