பங்குச்சந்தைகளில் சரிவுக்கு காரணம் என்ன?

இந்திய பங்குச்சந்தைகளில் சில்லறை முதலீட்டாளர்கள் மிகவும் நம்பிக்கையுடன், பங்குகள் மற்றும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்து வரும் நிலையில், தற்போதைய சரிவுக்கு காரணம் என்ன என்று கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸின் தலைவர் சஞ்சீவ் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த சில தரவுகள் சுருக்கமாக உங்களுக்காக அளிக்கிறோம்.. இந்தியாவின் வளர்ச்சி குறைவு மற்றும் இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளின் மதிப்பு மிக அதிகமாக வைக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குவதாக கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயங்கும் நிலையில், நீண்டகால முதலீடுகளுக்கு தற்போதே வாங்கி வைப்பது சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த நான்கரை மாதங்களில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து 2லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர். அமெரிக்க கடன் பத்திரங்கள், மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய கட்டுப்பாடுகள்தான் இந்திய சந்தைகளில் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. தற்போது பங்குகளின் விலை குறைந்திருப்பதால் தற்போதே பங்குகளை பரஸ்பர நிதியில் வாங்கிக் குவிப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பரஸ்பர நிதியில் மட்டும் 2.37 டிரில்லியன் இந்திய ரூபாய் அளவுக்கு பணம் புழங்கியுள்ளது. இது கடந்தாண்டில் 1.99 டிரில்லியன் இந்திய ரூபாயாக இருந்தது. கடந்த அக்டோபர் முதல் இதுவரை 3 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்துள்ளனர். சில்லறை முதலீட்டாளர்கள், நடுத்தர மற்றும் குறு முதிலீட்டு பங்குகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் வரும் நிதியாண்டில் இருந்து மக்கள் வாங்கும் சக்தியை ஊக்கப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் குறைந்த தொழில்நுட்பம் மற்றும் மனித உழைப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த நிதியாண்டில் 8.2 விழுக்காடு உயர்ந்த இந்திய உள்நாட்டு உற்பத்தி அடுத்த நிதியாண்டில் 6.4%ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.