ஸ்டார் ஹெல்த் விவரங்கள் கசிவா?
இந்தியாவில் மருத்துவ காப்பீட்டுத்துறையில் பெரிய பங்கு வகிக்கும் நிறுவனம் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் விவரங்கள், மருத்துவ அறிக்கைகள் இவை டெலிகிராம் செயலியில் கசிந்துள்ளதாக பரபரப்பு புகார்கள் எழுந்துள்ளன. இந்தியாவில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக திகழும் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் தரவுகள் உரிய அனுமதியின்றி கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சாட்பாட் என்ற கருவி மூலம் இந்த தகவல்கள் கசிந்ததாக கூறப்படுகிறது. அதில் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, மருத்துவ விவரங்கள், வயது, ஐடி கார்டுகள் இடம்பிடித்துள்ளன. ஏற்கனவே பாவெல் துரோவ் என்பவரை பிரான்ஸில் காவலர்கள் கைது செய்துள்ள நிலையில் டெலிகிராம் செயலியில் குற்றசம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. 3 கோடி வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிந்த நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமே 1500 கோப்புகளை டவுன்லோடு செய்யும் அளவுக்கு மிக எளிதாக தரவுகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் என்பதால் இது தொடர்பாக சைபர் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருந்து பில்கள் வெறும் 15000 ரூபாய்க்கே விற்கவும்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் தாக்குதல்களுக்கு இந்தியர்கள் 12 விழுக்காடு பாதிக்கப்படுகின்றனர். குற்றசம்பவங்கள் அதிகரிப்பதால் டெலிகிராம் செயலி மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. குற்றசெயல்களுக்கு டெலிகிராம் செயலி துணைபோவதாகவும் புகார் எழுந்துள்ளது.