வரைவு ஐபிஓ தயாரிக்கும் டாடா கேபிடல்..

நிதிச்சேவைகளில் ஈடுபட்டு வரும் டாடா கேபிடல் நிறுவனம் இந்திய மதிப்பில் 17 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டுவதற்கான ஆரம்ப பங்கு வெளியீட்டு ஆவணங்களை தயாரித்து வருகிறது. டாடாமோட்டார் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைக்கும் ஒப்பந்தத்துக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஒப்புதலுக்கு பிறகுதான் இந்த ஆரம்ப பங்கு, சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் டாடா கேபிடல் நிறுவனத்தின் மதிப்பு 11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. 2025 நிதியாண்டு முடிவுக்குள் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் இந்த முடிவை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவுகளில் உயர் அடுக்கு வங்கியல்லாத நிதி நிறுவனமாகவே டாடா கேபிடல் உள்ளது. ஐபிஓ தயாராகி வரும் நிலையில் 2 கோடியே 30லட்சம் ஈக்விட்டி பங்குகள் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதில் குறிப்பிட்ட ஒரு பங்கு பழைய பங்குதாரர்களிடம் இருந்து பெறவும், சில பங்குகள் புதிதாகவும் வெளியிடப்பட இருக்கிறது. ஆரம்ப பங்கு வெளியீடு மட்டுமின்றி டாடா கேபிடல் நிறுவனம் தனது பங்குகளில் உரிமைகளை விற்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓவுக்கு அனைத்து ஒப்புதல்களும் கிடைக்கும்பட்சத்தில் நிதித்துறையில் நாட்டில் கிடைக்கும் அதிகபட்ச ஆரம்ப பங்கு இது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் 2023-ல் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியிட்டது. டாடா கேபிடல் போலவே மற்றொரு மேல் அடுக்கு என்பிஎப்சி நிறுவனமான எச்டிஎப்சியும் தனது ஆரம்ப பங்குகளை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. அந்த திட்டம் 12,500 கோடி ரூபாயை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஜூன் மாதத்தில் டாடா கேபிடல், டாடா மோட்டார் பைனான்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் இடையே இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. டாடா கேபிடல் நிறுவனத்தின் 92.83 விழுக்காடு பங்குகள் தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்திடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.