மந்தமான பொருட்கள் விற்பனை..
இந்தியாவில் மக்கள் அதிகம் வாங்கும் பொருட்கள்விற்பனை வழக்கத்துக்கு மாறாக உள்ளதாக முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக யுனிலிவர், கொக்க கோலா, கோல்கேட், வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக தங்கள் விற்பனையில் பாதிப்பு இருப்பதாக கூறுகின்றனர். பருவமழை பாதித்த சில பகுதிகளில் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நிறுவனமான கொக்க கோலா, இந்தியாவில் மாறி வரும் விற்பனை சந்தை நிலவரத்தை தற்காலிக அம்சம் என்று விமர்சித்துள்ளது. இந்தாண்டு இந்தியாவில் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால், மகசூல் அதிகம் இருக்கும் என்றும் அடுத்தாண்டு அனைத்து தரப்பு விற்பனைகளும் நன்றாக இருக்கும் என்றும்அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தியாவில் மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் மளிகை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கணிசமாக சரிந்துள்ளது என்று யுனிலிவர் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் வோட்கா விற்கும் பெர்னாட் ரிச்சர்ட் என்ற நிறுவனமும் அடுத்த காலாண்டில் இரட்டை இலக்க விற்பனை நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் ஆதிக்கம் மற்றும் மக்கள் மத்தியில் அதிக பணம் புழங்குவதையும் நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஸ்கெட்சர்ஸ் என்ற ஷூ தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் 24 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நீல்சன் ஐகியூ என்ற நிறுவனத்தின் தகவலின்படி பிரீமியமான பொருட்களின் விற்பனை 50 விழுக்காடு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் டெக் சார்ந்த பொருட்களை வாங்க இந்தியர்கள் 41 விழுக்காடு விரும்புவதும் தெரிய வந்துள்ளது.